தேனி நாடாளுமன்ற தொகுதியில், 2 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு


தேனி நாடாளுமன்ற தொகுதியில், 2 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 May 2019 4:00 AM IST (Updated: 19 May 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

தேனி நாடாளுமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபடுகின்றனர். தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல், ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது. அப்போது வாக்குச்சாவடிகளில் நடந்த தவறு காரணமாக தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் வடுகப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண்-197 மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பாலசமுத்திரத்தில் உள்ள வாக்குச்சாவடி எண்-67 ஆகிய 2 இடங்களிலும் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி மறுவாக்குப் பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று மாலையில் வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் நேற்று எடுத்து செல்லப்பட்டன. வடுகப்பட்டிக்கு பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்தும், பாலசமுத்திரத்துக்கு ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

வாக்குப்பதிவு நடக்கும் 2 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணிக்காக போலீசார் நேற்று மாலையே வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள இடங்களுக்கு சென்று விட்டனர்.

வடுகப்பட்டியில் 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 12 துணை ராணுவ வீரர்கள், 33 ஆயுதப்படை போலீசார், 15 பட்டாலியன் போலீசார் உள்பட மொத்தம் 178 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பாலசமுத்திரத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள், 12 துணை ராணுவ வீரர்கள், 20 ஆயுதப்படை போலீசார், 15 பட்டாலியன் போலீசார் உள்பட 121 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 2 வாக்குச்சாவடிகளிலும் இணையதள இணைப்புடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையர், மாநில தலைமை தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் தங்களின் அலுவலகத்தில் இருந்தபடியே வாக்குப்பதிவு நடைமுறைகளை பார்வையிடலாம்.

இதுமட்டுமின்றி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமையிலான குழுவினர் கேமராக்கள் மூலம் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

வடுகப்பட்டியில் நடக்கும் வாக்குப்பதிவுக்காக கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அங்குள்ள தெருக்கள், சந்துகள் ஆகிய இடங்களிலும் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 10 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதை கண்காணிக்க அப்பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் மறுவாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக எதிர்கொள்ளும் வகையில் ‘3 விரைவு எதிர்வினை குழு’ அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் துணை ராணுவ வீரர்களின் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்து வரப்பட உள்ளன.

வாக்குப்பதிவை முன்னிட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெளியூர் நபர்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்று போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

Next Story