வேளாண்மை திட்ட பணிகளை இயக்குனர் ஆய்வு


வேளாண்மை திட்ட பணிகளை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2019 11:00 PM GMT (Updated: 18 May 2019 8:01 PM GMT)

வேளாண்மை திட்ட பணிகளை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில், வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார். இதில் அவர் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மண் பரிசோதனையின் முடிவுகளை வழங்கினார். மேலும் அந்த கிராமத்தில் தேசிய மண் வள இயக்கத்தின் மூலம் நடைபெற்ற மண் மாதிரிகள் சேகரிப்பு முகாமினை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார். தொடர்ந்து இரூரில் மேற்கொள்ளப்பட்ட கோடை உழவு பணியினை ஆய்வு செய்தபோது, விவசாயிகள் கோடை உழவு செய்வதன் மூலமாக தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டுப்புழுகள் மற்றும் முட்டைகள் அழிக்கப்படுவதுடன் மண்ணின் நீர் பிடிப்பு தன்மையையும் மேம்படுத்தலாம் என தெரிவித்தார். இதையடுத்து அவர் செங்குணம் கிராமத்தில் செல்வராஜ் என்பவரது மக்காச்சோள வயலில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்க திடலினை ஆய்வு செய்தார்.

கூடுதல் வருமானம் பெறலாம்

மேலும் பேரளி கிராமத்தில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள விவசாய விளைபொருட்களின் மதிப்பு கூட்டும் மையத்தினை வேளாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனைசெய்வதன் மூலமாக கூடுதல் வருமானம் பெறலாம் என கூறினார்.

ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட இணை இயக்குனர் இளவரசன், வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) சந்தான கிருஷ்ணன், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ராஜசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கலைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story