வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி - கலெக்டர் தலைமையில் நடந்தது
சிவகங்கையில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை,
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு, வாக்கு எண்ணிக்கையில் எப்படி செயல்படுவது என்பது குறித்த பயிற்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலெக்டர் கூறியதாவது:- சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கும் மற்றும் மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் வருகிற 23-ந்தேதி காலை 8 மணிக்கு காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். பின்பு சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காரைக்குடி, ஆலங்குடி, திருமயம், திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்திலிலுள்ள தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகின்றன.
சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலம் வாக்கு எண்ணுவதற்கு ஏதுவாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதைக் கண்காணிப்பதற்கு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக ஒரு உதவி தேர்தல் அலுவலருக்கு ஒரு மேஜை வீதம் அமைக்கப்பட்டுள்ளன.
தபால் வாக்குகள் எண்ணுவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் 4 மேஜைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் வாக்கு எண்ணும் பணி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 5 மணி முதல் சுழற்சி முறையில் அலுவலர்கள், பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பப்படுவார்கள்.
இந்த பணியில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 60 அலுவலர்கள், 60 கண்காணிப்பாளர்கள், 60 நுண்பார்வையாளர்கள், 20 உதவியாளர்கள் என 200 அலுவலர்கள் வீதமும், நாடாளுமன்றத் தொகுதிக்கு 1,200 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும், மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலுக்காக 200 அலுவலர்கள் உள்பட பணியாளர்கள், பணி மேற்கொள்ளவார்கள்.
இதேபோல் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் வேட்பாளர்களின் பரிந்துரை பெற்ற முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்கள் என 200 பேர்கள் வீதம் 1,200 நபர்களும் மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு 140 நபர்களும் வாக்கு எண்ணிக்கையின் போது கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று பணியிலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் காலை 5 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துவிட வேண்டும். பணி தொடங்கியது முதல் பணி முடியும் வரை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு எங்கும் செல்ல கூடாது. பணி மேற்கொள்ளும் போது முகவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை பொறுமையுடன் தெளிவுப்படுத்த வேண்டும்.
வாக்கு எண்ணி முடியும் வரை ஒவ்வொருவரின் பணியும் மிக மிக முக்கியமானதாகும். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை அவ்வப்போது வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படும். எனவே வாக்கு எண்ணிக்கை சிறந்த முறையில் நடந்து முடிந்திட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மேலும் வாக்கு எண்ணும் எந்திரத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் வாக்குகளை உறுதி செய்யும் எந்திரத்தில் பதிவான வாக்குகளை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். அதுபோல வாக்குகளை உறுதி செய்யும் எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணிய பின்பு அதை 25 சீட்டுகள் கொண்ட பண்டலாக கட்டி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி, வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வகுமாரி, ஈஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் குமணன், ராமபிரதீபன், மானாமதுரை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருவாசகம், தேர்தல் பிரிவு தாசில்தார்கள் ரமேஷ், கந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story