ஓட்டுக்காக எதையும் செய்ய தயங்காத கமல்ஹாசன் கட்சியை தடைசெய்ய வேண்டும் இந்துமுன்னணி மாநில பொதுச்செயலாளர் பேட்டி


ஓட்டுக்காக எதையும் செய்ய தயங்காத கமல்ஹாசன் கட்சியை தடைசெய்ய வேண்டும் இந்துமுன்னணி மாநில பொதுச்செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 20 May 2019 4:15 AM IST (Updated: 20 May 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டுக்காக எதையும் செய்யத்தயங்காத கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடைசெய்யவேண்டும் என்று இந்துமுன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

வேலூர், 

இந்துமுன்னணியின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று வேலூர் சத்துவாச்சாரியில் நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்ப்புத்தாண்டு தொடங்கியதும் அந்த ஆண்டுக்கான திட்டம் குறித்து கூட்டம் நடத்தப்படும். அதன்படி இந்த கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோடைகாலத்தில் கிறிஸ்தவ பள்ளிகளில் பண்பாட்டு வகுப்பு, சிறப்பு பயிற்சி வகுப்பு என நடத்தி குழந்தைகளிடம் மதமாற்றம் நடத்தப்படுகிறது. இதனை உளவுத்துறை கண்டுபிடித்து தடைசெய்ய வேண்டும்.

காவேரிப்பாக்கத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான கொங்கனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த நிலங்களை மீட்டு, கோவில் கும்பாபிஷேகம் நடத்தி, பக்தர்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் நாதுராம் கோட்சே என்றும் கூறி உள்ளார். அதுவும் முஸ்லிம்கள் மத்தியில் இதை கூறியிருக்கிறார். இது மதமோதல்களை உருவாக்கும் திட்டமிட்ட சதியாகும். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. ஆனால் கமல்ஹாசன் இந்து தீவிரவாதி என்று கூறியிருக்கிறார். இதுமிகப்பெரிய தவறு.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் ஓட்டுக்காக அவர் மதவெறியை தூண்டிவிடுகிறார். அவர் ஓட்டுக்காக எதையும் செய்வார். எனவே அவருடைய கட்சியை தடைசெய்யவேண்டும்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மதபிரசாரம் நடக்கிறது. எந்த மதத்தினராக இருந்தாலும் அதை தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் உள்ளார்கள். அவர்கள் இங்கு குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்த நாள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே உளவுத்துறை சரியாக செயல்படவேண்டும்.

அறநிலையத்துறையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு அதிகாரிகளே காரணம். கோவில்நிலங்களை விற்பதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். கோவில்களில் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ், கோட்ட செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், பொருளாளர் பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் ஆதிகேசவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story