பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவதிகை வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு 66.5 சதவீதம் ஓட்டுப்பதிவு
திருவதிகை வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. இதில் 66.5 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
பண்ருட்டி,
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடந்தது. அப்போது இத்தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி திருவதிகை பாவாடைசாமி பிள்ளை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 210-ம் எண் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளருடைய சின்னத்தின் பட்டன் இல்லை. இதனால் அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அ.ம.மு.க. வேட்பாளர் காசி.தங்கவேல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பினார்.
இதையடுத்து திருவதிகையில் உள்ள 210-ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும் மே மாதம் 19-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 657 ஓட்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 312 பேரும், பெண் வாக்காளர்கள் 345 பேரும் உள்ளனர்.
வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் கருவி உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. வாக்குச்சாவடி அலுவலர்களும் தயார் நிலையில் இருந்தனர். நேற்று காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
மறுவாக்குப்பதிவின் போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க திருவதிகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் வாக்குச்சாவடி முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தேர்தல் ஆணைய பார்வையாளர்கள் கணேஷ் பாட்டீல்(பொது பார்வையாளர்), தேவராஜூ (போலீஸ் பார்வையாளர்) மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், பண்ருட்டி தாசில்தார் கீதா ஆகியோர் தேர்தல் நடந்த வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டனர். வாக்குச்சாவடிக்கு நடக்க முடியாத வாக்காளர்களை போலீசார், சக்கர நாற்காலியில் அழைத்து வந்தனர். அவர்கள் அங்கு தங்களது ஜனநாயக கடமையை யாற்றினர்.
மாலை 6 மணிக்கு மறுவாக்குப்பதிவு முடிவடைந்தது. இதில் 437 ஓட்டுகள்(ஆண்-191, பெண்-246) பதிவாகி இருந்தது. இது 66.5 சதவீதமாகும். கடந்த 18-ந் தேதி நடைபெற்ற தேர்தலின்போது இதே வாக்குச்சாவடியில் 546 வாக்குகள்(83.1 சதவீதம்) பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்களும், வி.வி.பேட் கருவியும் வாக்குச்சாவடியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூருக்கு எடுத்து வரப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டது. அங்கு வருகிற 23-ந்தேதி காலை 8 மணிக்கு கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
Related Tags :
Next Story