நாட்டுத்துப்பாக்கியை காட்டி மிரட்டியபோது குண்டு பாய்ந்து பெண் படுகாயம்- கொழுந்தனார் கைது
மூங்கில்துறைப்பட்டு அருகே தகராறில் ஈடுபட்ட உறவினர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியபோது குண்டு பாய்ந்து பெண் படுகாயமடைந்தார். இது தொடர்பாக அவருடைய கொழுந்தனார் கைது செய்யப்பட்டார்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஈருடையாம்பட்டு வாணியம்பாறை பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி லீமா(வயது 28). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். அந்த சமயத்தில், சமீபத்தில் இறந்த உறவினர் ஒருவரது கல்லறையில் சிலுவை வைப்பது தொடர்பாக உறவினர்களிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அந்தோணிசாமியின் தம்பி லெனின்பாஸ்கர்(30), அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் உறவினர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை மிரட்டுவதற்காக வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை லெனின்பாஸ்கர் எடுத்து வந்தார். பின்னர் அவர், சுட்டுவிடுவதாக கூறி உறவினர்களை மிரட்டினார்.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் லெனின்பாஸ்கரை தடுக்க முயன்றனர். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக லெனின்பாஸ்கரின் கைவிரல் கிக்கரில் பட்டது. இதில் துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறி, லீமாவின் வலது காலில் பாய்ந்தது.
இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லீமாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து லெனின் பாஸ்கரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story