டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்: போக்குவரத்து ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்


டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்: போக்குவரத்து ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 19 May 2019 10:00 PM GMT (Updated: 19 May 2019 7:37 PM GMT)

டிரைவர், கண்டக்டரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் கொடுக்கூர், பெரம்பலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ் விருத்தாசலம் கடைவீதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென பஸ்சை வழிமறித்து, தங்களது மோட்டார் சைக்கிளுக்கு ஏன் வழிவிடவில்லை எனக்கேட்டு டிரைவர் சிவநாதன்(வயது 41), கண்டக்டர் இளையகுமார் ஆகியோரை தாக்கினர்.

இதில் காயமடைந்த டிரைவர், பஸ்சை பாலக்கரையில் நிறுத்தினார். பின்னர் டிரைவரும், கண்டக்டரும் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் டிரைவர், கண்டக்டரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்துவதற்காக பணிமனை முன்பு ஒன்று திரண்டனர். மேலும் அவர்கள், ஒரு நாள் பணியை புறக்கணிக்கப்போவதாக கூறினர். இதன் தொடர்ச்சியாக போக்குவரத்து ஊழியர்கள், பணிக்கு செல்லாமல் பணிமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி அறிந்ததும் பணிமனை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள், பணிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் போக்குவரத்து பணிமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story