வாழப்பாடி அருகே வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கி தயாரிக்கும் கூடம் கண்டுபிடிப்பு பெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


வாழப்பாடி அருகே வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கி தயாரிக்கும் கூடம் கண்டுபிடிப்பு பெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 May 2019 4:45 AM IST (Updated: 20 May 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கி தயாரிக்கும் கூடம் செயல்பட்டதை வனத்துறை மற்றும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாழப்பாடி,

சேலம் மாவட்டம், வாழப்பாடி வனச்சரக பகுதியான, பெரியகுட்டிமடுவு பகுதியில் வனச்சரகர் ஞானராஜ் தலைமையில் வனத்துறையினர் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக மரக்கட்டைகளை சுமந்து கொண்டு ஒருவர் சென்றார். உடனே அவரை பின்தொடர்ந்து வனத்துறையினர் சென்றனர்.

அப்போது அந்த வனப்பகுதியில் ராமர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னங்கீற்றால் கூரை வேயப்பட்ட கொட்டகை இருப்பதையும், அங்கு அந்த நபர் செல்வதையும் நோட்டமிட்டனர். உடனே அந்த கொட்டகைக்குள் வனத்துறையினர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை பிடித்து விசாரிக்க முயன்றனர்.

அதற்குள் அங்கிருந்த பெண் உள்பட 3 பேர் தப்பி ஓடினர். அப்போது அந்த கொட்டகைக்குள், நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 20-க்கும் மேற்பட்ட கட்டைகள் மற்றும் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் இரும்பு குழாய்கள் இருப்பதையும், 2 நாட்டு துப்பாக்கிகள் அங்கிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் வாழப்பாடி போலீசாருக்கு கள்ளத்துப்பாக்கி கூடம் வனப்பகுதியில் செயல்படுவது குறித்து தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில், ராமரின் தோட்டத்தில் அவர் அனுமதியுடன், அதே ஊரை சேர்ந்த வரதன் மகன் ராமர் என்பவர் நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களுக்கு பெண் ஒருவர் உதவியாக இருந்ததும், அவர் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் இந்த கும்பல் தோதகத்தி எனப்படும் ஈட்டி மரங்களில் இருந்து இந்த நாட்டு துப்பாக்கிக்கான கட்டைகளை தயாரித்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தோட்ட உரிமையாளர் ராமர், நாட்டு துப்பாக்கி தயாரித்த மற்றொரு ராமர் மற்றும் தப்பி ஓடி தலைமறைவான பெண் என 3 பேர் மீதும் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வாழப்பாடி அருகே வனப்பகுதியில் உள்ள தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி தயாரிக்கும் கூடம் இருந்ததை வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story