சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்


சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 20 May 2019 4:00 AM IST (Updated: 20 May 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டும், தீச்சட்டி ஏந்தி கொண்டும் ஊர்வலமாக வந்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் பெருந்திருவிழா கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, இரவு நேரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் அம்பாள், பரிவார தெய்வங்களுடன் வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலில் மாரியம்மன் வழிபாட்டை முன்னிட்டு காலை 9 மணிக்கு கோவில் வாகன மண்டபத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் மதுரகாளியம்மன், பரிவார தெய்வங்களுடன் வீதிஉலா வந்தார். இதையடுத்து பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக மதுர காளியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் மாலை 3 மணிக்கு மேல் மதுர காளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற விரதமிருந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனாக அலகு குத்திக்கொண்டும் மற்றும் தீச்சட்டி ஏந்தி கொண்டும், பறவை காவடியாகவும் பக்தி பரவசத்துடன் புறப்பட்டனர். அப்போது அவர்கள் மேள, தாளங்கள், தாரை தப்பட்டை முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று, மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தனர். இதையடுத்து இரவு ரிஷப வாகனத்தில் அம்பாள், பரிவார தெய்வங்களுடன் வீதிஉலா வந்தார்.

23-ந் தேதி தேரோட்டம்

இன்று (திங்கட்கிழமை) காலையில் அய்யனார் வழிபாட்டை முன்னிட்டு, யானை வாகனத்தில் அம்பாள், பரிவார தெய்வங்களுடன் வீதி உலா வருகிறார். இரவில் கோவில் நடை முன்பு பக்தர்கள் நாக்கில் அலகு குத்துதல் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மலைவழிபாடு, கண்ணாடி ரத விழாவும், நாளை மறுநாள் (புதன்கிழமை) உற்சவ அம்பாளுக்கு திருக்கல்யாணம் உற்சவமும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் கோவிலில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 23-ந் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. தேரோட்டம் முடிந்த பிறகு அன்று மதியம் சோலை முத்தையா வழிபாடு நடக்கிறது. 24-ந் தேதி இரவு ஊஞ்சல் விழாவும், 25-ந் தேதி விடையாற்றி விழாவும் நடக்கிறது. 26-ந் தேதி கோவில் சிறப்பு நடை திறக்கப்படுகிறது. 27-ந் தேதி மூலஸ்தான சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி மலை ஏற்றத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் பாரதிராஜா மற்றும் கோவில் பணியாளர்கள், கோவில் பூசாரிகள் மற்றும் மதுரகாளியம்மன் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Next Story