முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறி வாக்களிக்க பெண்ணுக்கு அனுமதி மறுப்பு அதிகாரிகளுடன் தி.மு.க.வினர் வாக்குவாதம்


முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறி வாக்களிக்க பெண்ணுக்கு அனுமதி மறுப்பு அதிகாரிகளுடன் தி.மு.க.வினர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 20 May 2019 4:45 AM IST (Updated: 20 May 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறி வாக்களிக்க பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தேர்தல் அதிகாரிகளுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சூலூர்,

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த காமாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள 136-வது வாக்குச்சாவடியில் வாக்க ளிப்பதற்காக ஒரு பெண் வந்தார். அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறி தேர்தல் அதிகாரிகள் ஓட்டுப்போட அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனே போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வாக்குச்சாவடி அதிகாரிகள் கூறியதாவது:-

அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் 5.30 மணியளவில் ஓட்டுப்போட வந்தார். அவரிடம் இருந்த ஸ்மார்ட் கார்டு சரிபார்க்கப்பட்டது. அதில் அவருடைய புகைப்படம் இல்லை. இதனால் ரேஷன் கார்டை எடுத்து வருமாறு அதிகாரிகள் கூறினர். உடனே அவர் கொண்டு வந்த ரேஷன் கார்டிலும் புகைப்படம் இல்லை. முறையான ஆவணங்கள் இல்லை என்பதால் அந்த பெண்ணை ஓட்டுப் போட அனுமதிக்க வில்லை. ஆனால் தி.மு.க.வினர், அந்த பெண்ணை ஓட்டு போட அனுமதிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து தி.மு.க.வினர் கூறுகையில், அடையாள அட்டையில் புகைப்படம் இல்லை என்று கூறி அந்த பெண் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு பெண் என்றும் கூட பார்க்காமல் மீண்டும், மீண்டும் வீட்டுக்கு அனுப்பி, வேறு ஆவணத்தை எடுத்தவர சொல்லி சிரமப்படுத்தினர். பின்னர் முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறி 5.50 மணியளவில் கூறி வாக்களிக்க அனுமதி மறுத்து விட்டனர் என்றனர். இதையடுத்து அந்த பெண், ஏன் ஓட்டு போட முடியாது என்ற காரணத்தை எழுதி தேர்தல் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுத்தார். வாக்குச்சாவடி அதிகாரி கையெழுத்து போட்டு கொடுத்ததை நாளை (இன்று) கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து முறையிடுவோம் என்று தி.மு.க.வினர் கூறினர்.

Next Story