யானை முட்டி சாய்த்த பாக்குமரம் விழுந்து தொழிலாளி வீடு சேதம்
கூடலூர் அருகே யானை முட்டி சாய்த்த பாக்குமரம் விழுந்து தொழிலாளி வீடு சேதமடைந்தது.
கூடலூர்,
கூடலூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகள், வாகனங்கள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே பலாப்பழ சீசன் தொடங்கி விட்டதால் காட்டு யானைகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கூடலூர் அருகே பால்மேடு பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து பாக்கு, வாழை, பலாக்காய்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்தது.
அப்போது பாக்கு மரம் ஒன்றை காட்டு யானை முட்டி, அருகில் உள்ள தொழிலாளி மகாதேவன் வீட்டின் மீது தள்ளியது. இதில் தொழிலாளி வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்தது. இதனால் தொழிலாளி பீதியடைந்து சத்தம் போட்டார்.
அவரின் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் காட்டு யானையை விரட்டியடித்தனர். முன்னதாக நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய்களையும் காட்டு யானை உடைத்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேவாலா வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது சேதம் அடைந்த வீட்டை சீரமைக்க உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story