துடியலூர் பகுதியில் பொதுமக்களை ஏமாற்றி தரம் குறைந்த செல்போன்களை விற்பனை செய்யும் வட மாநில கும்பல்
துடியலூரில் விலை உயர்ந்த செல்போன் என்று கூறி தரம் குறைந்த செல்போன்களை பொதுமக்களுக்கு வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் ஒன்று விற்பனை செய்து ஏமாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது.
துடியலுர்,
கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தற்போது வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவு பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் கட்டிட வேலைகள், உணவகங்கள் என பல்வேறு துறைகளில் பணி புரிகின்றனர். இதுதவிர எலக்ட்ரானிக் சாதனங்கள், கம்பளி,போர்வை, துணிகள், விளையாட்டு சாதனங்கள், ஹெல்மெட் என்று பல பொருட்களை விற்று வருகிறார்கள். கோவை மாநகரிலும், கிரமப்புற பகுதிகளிலும், ரோடு ஓரங்களிலும் அவர்களின் வியாபாரம் களைகட்டுகிறது,.
இந்த நிலையில் கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சில வட மாநிலத்தவர் நூதன முறையில் ஏமாற்று வியாபாரம் மேற்கொண்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த கும்பலிடம் ஏமாந்தவர் ஒருவர் கூறியதாவது:-
வடமாநிலத்தவரின் நடமாட்டம் தற்போது கோவை முழுவதும் அதிகரித்து வருகிறது.துடியலூர் பகுதியில் ஒரு கும்பலின் செயல்பாடு பீதி அளிப்பதாக இருக்கிறது.
தனியாக நிற்கும் நபர்களை இந்த கும்பல் நோட்டமிடுகிறது. பின்னர் அந்த கும்பல் அவர்களின் அருகில் வந்து தான் சமீபத்தில் 64 ஜி.பி. மெமரி வசதி கொண்ட விலை உயர்ந்த செல்போன் வாங்கியதாகவும், அதன் விலை ரூ.15 ஆயிரம் என்றும் கூறுகின்றனர்.
பின்னர் தனது குடும்பத்தின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்றோ, தங்களின் சொந்த ஊருக்கு செல்ல பணம் தேவைப்படுகிறதோ என்றோ ஏதாவது ஒரு காரணம் கூறுகின்றனர். பணம் அவசரமாக தேவைப்படுவதால் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள இந்த செல்போனை அவசர தேவைக்காக விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் பொதுமக்களை நம்ப வைக்க செல்போன் வாங்கியதற்கான பில், அதில் உள்ள ஐ.எம்.இ.ஐ. எண் மற்றும் செல்போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ. எண் ஆகியவற்றை காண்பிக்கின்றனர்.
இந்த செல்போனை ஆன் செய்ததும் பிரபல செல்போன்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களும் வருகின்றன. இதனால் இந்த செல்போன் ஒரிஜனல் தான் என்று பொதுமக்கள் நம்புகின்றனர். பின்னர் அந்த வடமாநில கும்பலிடம் பேரம் பேசுகின்றனர். சிலர் ரூ.5 ஆயிரத்தில் தொடங்கி ரூ.8 ஆயிரம் வரை இந்த செல்போனை விலை கொடுத்து வாங்குகின்றனர்.
இவ்வாறு விலை கொடுத்து வாங்கிய செல்போனை பொதுமக்கள் பயன்படுத்திய பின்னர்தான் அது தரம் குறைந்த செல்போன் என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகின்றனர். இந்த செல்போன்களில் மெமரி மிகக்குறைவாக உள்ளதுடன், இணையதள சேவை மிகக்குறைந்த வேகத்தில் செயல்படுகிறது. மேலும் இந்த செல்போன்களின் செயல்பாடும் மிக மோசமாக உள்ளது. இதனால் இந்த செல்போன்களை எதற்கு இவ்வளவு பணம் கொடுத்து வாங்கினோம் என்று பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
மேலும் செல்போன் கடைக்காரர்களிடம் தாங்கள் வாங்கிய செல்போனை காண்பித்தால், ரூ.1000 கூட மதிப்பு இல்லாத சீன போன்களை இறக்குமதி செய்து, அதனை பெயர்மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. எனவே இதுபோன்ற நூதன முறையில் செல்போன்களை விற்பனை செய்து ஏமாற்றும் வட மாநில கும்பல்களை கண்டறிந்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story