பூச்செடிகளுக்கு மருந்து அடித்தபோது உரக்கடை உரிமையாளர் மூச்சுத்திணறி சாவு


பூச்செடிகளுக்கு மருந்து அடித்தபோது உரக்கடை உரிமையாளர் மூச்சுத்திணறி சாவு
x
தினத்தந்தி 19 May 2019 10:30 PM GMT (Updated: 19 May 2019 8:54 PM GMT)

பாதுகாப்பு கவசம் இல்லாமல் பூச்செடிகளுக்கு மருந்து அடித்த உரக்கடை உரிமையாளர் மூச்சுத்திணறி இறந்தார்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு கோட்டைமலைரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 27). பட்டதாரியான இவர் ஆரணி அருகே உள்ள வெள்ளேரி கிராமத்தில் உரக்கடை வைத்துள்ளார்.

இவருக்கு தனது ஊரின் அருகே சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு மணிகண்டன் சம்பங்கி பூ பயிரிட்டுள்ளார். இந்த நிலையில் சம்பங்கி பூக்களுக்கு மருந்து அடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் முகத்தில் கவசம் (‘மாஸ்க்’) ஏதும் அணிந்திருக்கவில்லை.

இந்த நிலையில் மருந்து அடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மணிகண்டனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் அங்கு மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேலூர்அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

உரக்கடைகளில் உரம், பூச்சி மருந்து வாங்கிச்செல்பவர்கள் அதனை வயல்களில் தெளிக்கும்போது பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்க வேண்டும் என உரிமையாளர்கள் அறிவுரை வழங்குவர். ஆனால் உரக்கடை உரிமையாளரே பூச்செடிகளுக்கு பாதுகாப்பு கவசம் இன்றி மருந்து அடித்தபோது மூச்சுத்திணறி இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story