உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் கண்காணிப்பு குறைபாடு: ரேஷன்பொருட்கள் வெளிச்சந்தைக்கு தாராளமாக கடத்தப்படும் நிலை


உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் கண்காணிப்பு குறைபாடு: ரேஷன்பொருட்கள் வெளிச்சந்தைக்கு தாராளமாக கடத்தப்படும் நிலை
x
தினத்தந்தி 19 May 2019 10:15 PM GMT (Updated: 19 May 2019 9:13 PM GMT)

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் கண்காணிப்பு குறைபாட்டினால் ரேஷன்பொருட்கள் வெளிச்சந்தைக்கு தாராளமாக கடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

விருதுநகர், 

தமிழகம் முழுவதும் உணவு பொருள் கடத்தலை தடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவினர் ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்கல் மற்றும் பொது வினியோக முறைகேடு ஆகியவற்றை கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மாவட்டம் முழுவதும் இந்த பிரிவினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும்.

ஆனால் சமீபகாலமாக விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முறையாக கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரேஷன் கடைகளில் இருந்து வெளிச் சந்தைக்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகள் அனைத்திலும் ரேஷன்பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்களிடையே ஒரு மாயதோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் ரேஷன்பொருட்கள் அதற்கென உள்ள வெளிச்சந்தை வியாபாரிகளால் கடத்தப்படும் நிலை தொடருகிறது.

மாவட்ட வழங்கல் துறை இந்த பிரச்சினையில் முறையாக கண்காணிக்காத நிலை உள்ளதாலும் உணவு கடத்தல் பிரிவு போலீசாரின் கவன குறைபாட்டாலும் ரேஷன்பொருட்கள் தாராளமாக வெளிச்சந்தைக்கு கொண்டு செல்லப்படும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டியது அவசியமாகும்.

ரேஷன்பொருட்கள் வினியோகத்தை கண்காணிக்க வேண்டிய வழங்கல் துறையினரும், உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியை முறையாக மேற்கொண்டு ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story