திருப்பரங்குன்றம் தொகுதியில் 74.11 சதவீத வாக்குகள் பதிவு
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் 74.11 சதவீத வாக்குகள் பதிவாகின.
மதுரை,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சீனிவேல் வெற்றி பெற்றார். ஆனால், அவர் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே மரணம் அடைந்ததால், அந்த தொகுதி 2016-ம் ஆண்டில் இடைத்தேர்தலை சந்தித்தது. அப்போது அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் தொகுதி சந்தித்த 2-வது இடைத்தேர்தல் இதுவாகும்.
தற்போது அ.தி.மு.க. வேட்பாளராக வக்கீல் முனியாண்டி, தி.மு.க. வேட்பாளராக டாக்டர் சரவணன், அ.ம.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எ.ல்.ஏ. மகேந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ரேவதி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக சக்திவேல் மற்றும் சுயேச்சைகள் என 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இடைத்தேர்தலையொட்டி 297 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
இங்கு நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மதியம் 12 மணி அளவில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல வாக்குச்சாவடிகள் வெறிச்சோடின.
இதனால் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு மந்தமாகியது. இந்த நிலையில் 3.30 மணியில் இருந்து மீண்டும் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
ஒரு சில வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு பின்னரும் சிலர் ஓட்டு போட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்தனர்.
அதன்படி அவனியாபுரம் பகுதியில் 3 வாக்குச்சாவடி, தென்பழஞ்சியில் 2 வாக்குச்சாவடி, தனக்கன்குளம், கீழக்குயில்குடி, பனையூர், வில்லாபுரம் பகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 9 வாக்குச்சாவடிகளில் டோக்கன் பெற்ற வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். அந்த ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிய இரவு 7 மணி வரை ஆனது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்தம் 74.11 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலைவிட 3.92 சதவீதம் அதிகம் ஆகும்.
வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குச்சாவடிகளில் இருந்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாகனங்களில் ஏற்றி ஓட்டு எண்ணிக்கை மையமான மதுரை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. அங்குதான் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வாக்குச்சாவடி மையங்களில் இடைத்தேர்தலுக்காக 1,504 ஊழியர்கள் பணியாற்றினார்கள். சுமார் 5 ஆயிரம் போலீசாரும், 4 கம்பெனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில், துணை கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வை செய்தனர்.
Related Tags :
Next Story