திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்களிக்க ஆர்வமுடன் வந்த முதியவர்கள்
திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏராளமான முதியவர்கள் வாக்குப்பதிவு தொடங்கிய 7 மணிக்கே ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
மதுரை,
திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. தேர்தல் தொடங்கிய உடனேயே அவனியாபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஏராளமான முதியவர்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட வந்தனர். தள்ளாத வயதிலும் சிலரின் உதவியுடன் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் எண்ணத்தில் அவர்கள் வந்து ஓட்டு போட்டனர். அவர்களை பார்த்ததும் போலீசார் அவர்களை வரிசையில் நிற்க விடாமல் நேராக வாக்கு சாவடிக்குள் சென்று வாக்களிக்குமாறு அனுப்பி வைத்தனர்.
அதில் வெள்ளைக்கல் பகுதியைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி சொர்ணம்மாள் நடக்க முடியாத நிலையிலும் அவர் காலை 7 மணிக்கே வந்து ஓட்டு போட்டார். அதே போன்று பொன்னையா(66) என்ற முதியவர் வாய்ப்புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அப்படி இருந்தும் மூக்கில் டியூப்புடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் பிறக்கும் போது பிரசவம் பார்த்த தங்கம்மாள்(90) என்பவர் ஓட்டு போட வந்தார். அவர் முனியாண்டியை பார்த்தும் சந்தோஷப்பட்டு உனக்காக தான் 7 மணிக்கே ஓட்டு போட வந்தேன் என்று கூறினார்.
Related Tags :
Next Story