தேனி நகராட்சியில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுகாதாரக்கேடு


தேனி நகராட்சியில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுகாதாரக்கேடு
x
தினத்தந்தி 19 May 2019 10:45 PM GMT (Updated: 19 May 2019 9:42 PM GMT)

தேனி நகராட்சியில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

தேனி,

தேனி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகர் பகுதியிலேயே குப்பைக்கிடங்கு அமைந்து இருந்தது. பின்னர் குடியிருப்புகள் விரிவாக்கம், இடப்பற்றாக்குறை காரணமாக தேனியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தப்புக்குண்டு பகுதிக்கு குப்பைக்கிடங்கு மாற்றப்பட்டது. தற்போது நகரில் அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது.

அத்துடன் நகர் பகுதியிலும் சில இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த திட்டப் பணிகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக கே.ஆர்.ஆர். நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கான திடலை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடாது என்றும், அதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், நகராட்சி நிர்வாகம் தரப்பில் இது வளர்ச்சிக் கான திட்டம் என்ற முழக்கம் முன்வைக்கப்படுகிறது. ஆனாலும், மக்களுக்கு இந்த திட்டத்தின் மீதான அவநம்பிக்கையே மேலோங்கி இருப்பதை பார்க்க முடிகிறது.

மக்களின் இந்த மனநிலைக்கு நகர் பகுதியில் குப்பை மேலாண்மை எனும் பெயரில் மேற்கொள்ளும் அரைகுறை பணிகளே முதன்மையான காரணமாக உள்ளது. மாவட்டத்தின் தலைநகராக திகழும் தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தினமும் துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடுகள் தேடி சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் கொட்டப்படுகின்றன. அத்துடன் பொதுமக்களும் குப்பைத்தொட்டியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இவ்வாறு குப்பைத்தொட்டிகளில் கொட்டும் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் அடிக்கடி தேக்க நிலை ஏற்படுகிறது. காலை நேரத்தில் லாரிகள், டிராக்டர்களில் குப்பைகள் கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்கள் முறையாக குப்பைகளை மூடி எடுத்துச் செல்வது இல்லை. சாலையில் குப்பைகளை பறக்கவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. இதனால், காலை நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அதுபோல், குடியிருப்பு பகுதிகளில் இருந்து குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே தீ வைத்து எரித்து அழிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குப்பைகளுக்கு தீ வைப்பதால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் பங்களாமேடு பகுதியும் ஒன்று.

இங்கு அரசு மாணவர் விடுதி, ரேஷன் கடை, கோவில், திருமண மண்டபம் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. குப்பைத்தொட்டிக்குள்ளும் தீ வைக்கப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வருபவர்கள், திருமண மண்டபத்துக்கு வருபவர்கள் மற்றும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் ஏற்படும் நச்சுப்புகையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் மின்சார டிரான்ஸ்பார்மருக்கு அருகில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் விபத்து அபாயமும் உள்ளது.

இதேபகுதியில் நகராட்சி பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரேற்றும் நிலையம் உள்ளது. இங்குள்ள மரங்களில் இருந்து விழும் இலை, சருகுகள் கூட அப்புறப்படுத்தப்படாமல் தீ வைத்து எரிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதுவும் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், சிலர் இப்பகுதிகளில் பழைய மின்வயர்களில் இருந்து செம்பு கம்பிகளை எடுப்பதற்காக அவற்றை குப்பைகளோடு குப்பையாக சேர்த்து எரிக்கின்றனர்.

எனவே குப்பைகளில் தீ வைப்பதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை மேலாண்மை குறித்தும், தீ வைப்பதை தடுப்பது குறித்தும் அறிவுரைகள் வழங்க வேண்டும். மேலும், குப்பைகளை சாலைகள், தெருக்களில் கொட்டிக் கொண்டே செல்லாமல், வலையால் முழுவதும் மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story