பழனி அருகே சூறாவளி காற்றால் வீடுகள், கோழிப்பண்ணைகள் சேதம்
பழனி அருகே சூறாவளியால் வீடுகள், கோழிப்பண்ணைகள் சேதமடைந்தன. சீரமைப்பு பணியில் மின்சாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நெய்க்காரப்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், காவலப்பட்டி, குப்பம்பாளையம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் ஏராளமான வீடுகள், கோழிப்பண்ணைகள் ஆகியவற்றின் மேற்கூரை காற்றில் பறந்ததோடு, பலத்த சேதமடைந்தன.
வேலாயுதம்பாளையம்புதூரை சேர்ந்த தங்கவேல், ராமச்சந்திரன், பிரவீன், கருப்புச்சாமி ஆகியோருக்கு சொந்தமான கோழிப்பண்ணைகளின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதேபோல் முத்துச்சாமி என்பவரின் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கூரை முற்றிலும் சேதம் அடைந்தது. பாப்பம்பட்டியில் சுந்தரமூர்த்தி என்பவரின் வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
வேலாயுதம்பாளையம்புதூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து அருகே உள்ள மின்கம்பங்கள் மீது விழுந்தன. சில இடங்களில் மின்கம்பங்கள் பாதி முறிந்த நிலையில் காட்சியளித்தன. மின்கம்பங்கள் சேதமானதால் அப்பகுதியில் முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே இரவு முழுவதும் மின்சாரமின்றி மக்கள் பெரும் அவதியடைந்தனர். எனவே சேதமடைந்த வீடுகள், கோழிப்பண்ணைகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று பாப்பம்பட்டி பகுதிக்கு சென்ற மின்சாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அங்கு சேதமானவை குறித்து கணக்கெடுப்பு பணி மற்றும் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பலத்த காற்றினால் மின்கம்பங்கள் சேதமடைந்தன. தற்போது சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சேதமான வீடுகள், கோழிப்பண்ணைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றனர்.
Related Tags :
Next Story