ஓட்டப்பிடாரம் அருகே குடோனில் பயங்கர தீ விபத்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
ஓட்டப்பிடாரம் அருகே குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கடற்கரையாண்டி (வயது 37). இவர் குறுக்குச்சாலையை சேர்ந்த மகேஷ் என்பவருக்கு சொந்தமான ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள ஒரு குடோனில் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து இருந்தார். அந்த இடத்தில் கண்டங்கத்திரி, கரிப்பான் செடி, கோரைக் கிழங்கு உள்ளிட்டவைகளை காய வைத்து அவைகளை அங்கு இருந்து வெளியூர்களுக்கு வினியோகம் செய்வதற்காக சேமித்து வைத்து இருந்தார்.
அதேபோல் தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்த ராஜாமணி (71) என்பவரும் அதே குடோனில் மற்றொரு பகுதியை வாடகைக்கு எடுத்து, அதில் வியாபாரத்துக்காக உளுந்து, பாசிப்பருப்பு, பருத்தி, வத்தல் போன்ற தானியங்களை வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அந்த குடோனில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. இதனால் கடற்கரையாண்டி வைத்து இருந்த பொருட்கள், ராஜாமணி தானியங்கள் வைத்து இருந்த பகுதியிலும் தீ பரவி பற்றி எரிந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், சிப்காட், தனியார் காற்றாலைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் உள்பட 8 வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ், கூடுதல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமரேசன், நிலைய அலுவலர்கள் சுப்பையா, பாலகிருஷ்ணன், இசக்கி உள்பட 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினார்கள். அவர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் ரூ.1.12 கோடி மதிப்புள்ள பொருட்கள், தானியங்கள் முழுவதும் எரிந்து நாசமாகின.
இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story