தூத்துக்குடியில் மது விற்ற 2 பேர் கைது 211 பாட்டில்கள் பறிமுதல்
தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 211 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தூத்துக்குடி பிரையன்ட் நகரில் உள்ள ஒரு கறிக்கடையில் சட்ட விரோதமாக மது விற்று வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த முனியசாமி (வயது 65) என்பவரை கைது செய்தனர். அந்த கடையில் இருந்து 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல் 3 சென்ட் அந்தோணியார்புரத்தில் உள்ள பழக்கடையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த கடையின் உரிமையாளர் காமராஜ் (50) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story