இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது: ஓட்டப்பிடாரம் தொகுதியில் 72.61 சதவீதம் வாக்குப்பதிவு


இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது: ஓட்டப்பிடாரம் தொகுதியில் 72.61 சதவீதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 20 May 2019 5:15 AM IST (Updated: 20 May 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டுப்போட்டனர். இறுதியில் 72.61 சதவீதம் வாக்குகள் பதிவானது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மோகன், தி.மு.க. சார்பில் சண்முகையா, அ.ம.மு.க. சார்பில் சுந்தரராஜ், மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் அகல்யா மற்றும் சுயேச்சைகள் உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான பொருட்கள் அனைத்தும் நேற்று முன்தினம் மாலைக்குள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த தொகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 80 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 18 ஆயிரத்து 751 பெண் வாக்காளர்களும், 16 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 847 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 257 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை 6 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.

தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர். கிராமப்புறங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் நேற்று கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால் 11 மணிக்கு பிறகு வாக்காளர்கள் வருகை குறைவாக இருந்தது. இதன்காரணமாக பல வாக்குச்சாவடிகளில் ஒரு சிலர் மட்டுமே வாக்களிக்க வந்தனர். இதனால் அந்த வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. கட்சி முகவர்களும் வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குச்சாவடிக்கு வெளியில் வந்து நின்று கொண்டு இருந்தனர்.

வாக்குச்சாவடிகளுக்கு வந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக பள்ளி மாணவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் வைத்து வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து சென்றனர். நேற்று ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர்.

இடைத்தேர்தலையொட்டி தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கர் ஆகியோர் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பதற்றமான 71 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம், தமிழக சிறப்பு போலீஸ் படையினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

போலீசார் தொகுதி முழுவதும் வாகனங்களில் ஆங்காங்கே ரோந்து பணியிலும் ஈடுபட்டு இருந்தனர். வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் முக்கிய இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் வரை எந்த வாகனமும் நிறுத்துவதற்கு அனுமதிக்கவில்லை. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் தொகுதி முழுவதும் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஊக்கப்படுத்தினர். இதனால் வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அரசியல் கட்சியினர் பூத் அமைத்து இருந்தனர். அவர்கள் ஓட்டு போட செல்லும் வாக்காளர்கள் விவரங்களை சரிபார்த்தபடி இருந்தனர்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 66.77 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 6 மணிக்கு மேல் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வாக்காளர்கள் வரிசையில் காத்து நின்றனர். இதனால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதன் காரணமாக இந்த வாக்குச்சாவடிகளில் இரவு வரை வாக்குப்பதிவு நடந்தது. இறுதியாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் 72.61 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

Next Story