திருக்கனூர் பகுதியில் கரடி நடமாட்டம்? வனத்துறையினர் நேரில் ஆய்வு


திருக்கனூர் பகுதியில் கரடி நடமாட்டம்? வனத்துறையினர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 20 May 2019 4:15 AM IST (Updated: 20 May 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவலை தொடர்ந்து அங்கு வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.

திருக்கனூர், 

புதுவை மாநிலம் திருக்கனூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களான செட்டிப்பட்டு, மணலிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மதகடிப்பட்டு, சோம்பட்டு ஆகியவை விவசாய பகுதியாகும். சங்கராபரணி ஆற்றங்கரையோரம் இந்த கிராமங்கள் உள்ளன. முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பியுள்ள இவர்கள் இங்கு பருத்தி, நெல், கரும்பு, சவுக்கை, மரவள்ளி என பயிரிட்டு வருகின்றனர்.

ஆற்றங்கரையையொட்டிய பகுதிகளில் அடர்ந்த முள் காடுகளும், புதர்களும் மண்டிக்கிடக்கின்றன.

இங்கு மான், மயில், காட்டு பன்றிகள் அதிகம் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் காட்டுபன்றி தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

நேற்று முன்தினம்செட்டிப்பட்டு வயல்வெளி பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதாக விவசாயி கோவிந்தராஜ் என்பவர் கூறினார். இதனால் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்களுக்கு செல்ல மிகவும் பயப்படுகிறார்கள். கரடி நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் உடனடியாக வனத்துறை துணை இயக்குனர் குமரவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது கரடியின் கால் தடமோ அல்லது மற்ற தடயங்கள் எதுவும் தென்படவில்லை.

ஏதாவது அடையாளம் தென்பட்டால் தான் கரடி நடமாட்டம் இருக்கிறதா? என்பதை உறுதியாக கூற முடியும் என அதிகாரிகள் கூறினார்கள். இன்று (திங்கட்கிழமை) முதல் திருக்கனூர் கிராமப்புற பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ரோந்து சென்று கரடிகள் நடமாட்டத்தை ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவித்தனர். காட்டு பன்றிகள், கரடி நடமாட்டத்தை கண்காணித்து பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் அரசு செயல்படவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story