பதிவு செய்ய அதிகாரிகள் நியமனம்: எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமின்றி இடங்களை வாடகைக்கு விடக்கூடாது கலெக்டர் ராமன் தகவல்


பதிவு செய்ய அதிகாரிகள் நியமனம்: எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமின்றி இடங்களை வாடகைக்கு விடக்கூடாது கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 20 May 2019 11:00 PM GMT (Updated: 20 May 2019 2:33 PM GMT)

எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் இன்றி இடங்களை வாடகைக்கு விடக்கக்கூடாது என்றும், வாடகைக்கு விடப்படும் இடங்களை பதிவு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

வேலூர், 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வாடகை தாரர்களின் உரிமைகள் ஒழுங்குமுறை மற்றும் பொறுப்படைவுகள் சட்டம் 22.2.2019 முதல் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. இச்சட்டம் வாடகை நிர்ணயம் செய்யப்படுவதை கட்டுப்படுத்தி ஒழுங்குமுறையினை கொண்டுவரவும், வாடகைதாரர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தங்களது உரிமைகள், கடமைகளை பின்பற்றவும் இருதரப்பினரிடையே ஏற்படும் சர்ச்சைகளுக்கு விரைந்து தீர்வு காணவும் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் உரிய எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமின்றி பொதுமக்கள் யாரும் இடங்களை வாடகைக்கு விடவோ, வாடகைக்கு எடுத்துக்கொள்ளவோ கூடாது. பொதுமக்கள் தங்களது எழுத்துப்பூர்வமான வாடகை ஒப்பந்தங்களை அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதிகாரிகள் விவரங்களை பதிவு செய்து, அதற்கான குத்தகை பதிவு எண் வழங்குவார். இதற்காக வேலூர் மாவட்டத்திற்கு துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வேலூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகாக்களுக்கு வேலூர் உதவி கலெக்டரும், ராணிப்பேட்டை தாலுகாக்களுக்கு உட்பட்ட வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், நெமிலி தாலுகாக்களுக்கு ராணிப்பேட்டை உதவி கலெக்டரும், திருப்பத்தூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி ஆகிய தாலுக்காக்களுக்கு திருப்பத்தூர் உதவி கலெக்டரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story