பளுகல் அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை


பளுகல் அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 21 May 2019 3:45 AM IST (Updated: 20 May 2019 8:23 PM IST)
t-max-icont-min-icon

பளுகல் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

களியக்காவிளை,

கேரள மாநிலம் பாறசாலை மஞ்சவிளையை சேர்ந்தவர் சுபின்குமார் (வயது 42), பளுகல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில்  ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சந்தை அருகே சென்றபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது.

அதில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி கீழதேவநல்லூர் வடக்குத்தெருவை சேர்ந்த மாரி (24), ராமநேரியை சேர்ந்த சித்திரைவேல் (20) ஆகியோர் வந்தனர். இந்த நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 3 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுபின்குமாரும், மாரியும் பரிதாபமாக பலியானார்கள்.

 படுகாயம் அடைந்த சித்திரைவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாரியும், சித்திரைவேலும் பளுகலில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளது.

Next Story