ஆரணி பகுதியில் அரசு சான்றிதழ்கள் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதி இன்டர்நெட் சேவை திறனை அதிகரிக்க கோரிக்கை


ஆரணி பகுதியில் அரசு சான்றிதழ்கள் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதி இன்டர்நெட் சேவை திறனை அதிகரிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 May 2019 3:45 AM IST (Updated: 20 May 2019 8:35 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி பகுதியில் இன்டர்நெட் சேவை பாதிப்பால் அரசு சான்றிதழ்கள் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இன்டர்நெட் சேவை திறனை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஆரணி, 

தமிழகத்தில் தற்போது ஆன்லைன் மூலமாக வருவாய்த்துறை பல்வேறு துறைகளின் சான்றிதழ்கள் இ–சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆரணி வட்டாரத்தில் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கண்ணமங்கலம் பேரூராட்சி ஆகிய அலுவலகங்களில் இ–சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த இ–சேவை மையம் மூலமாக ஆன்லைனில் வருமான சான்று, இருப்பிட சான்று, சாதி சான்றுகள் பெற பொதுமக்கள் பதிவு செய்கின்றனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் மாணவ – மாணவிகள் சாதி சான்று, வருமான சான்றுகள் கேட்டு இ–சேவை மையங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

ஆனால் ஆரணி பகுதியில் கடந்த ஒரு மாதமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இன்டர்நெட் சேவை சரியாக கிடைப்பதில்லை. இதனால் ஆன்லைனில் சான்றிதழ் கேட்டு பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய முடியாமல் வருவாய்த்துறை அதிகாரிகளும் திணறி வருகின்றனர்.

மேலும் அரசின் திருமண உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கவும், பணமில்லா பணபரிவர்த்தனை செய்யவும் முடியவில்லை. எனவே ஆரணி பகுதியில் பி.எஸ்.என்.எல். இன்டர்நெட் சேவை திறனை அதிகப்படுத்தி பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகளுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story