வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறை அதிகாரி மனைவி தர்ணா போராட்டம்


வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறை அதிகாரி மனைவி தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 20 May 2019 10:30 PM GMT (Updated: 20 May 2019 4:32 PM GMT)

ரகசிய திருமணம் செய்துகொண்டு, தன்னையும், தனது மகன்களையும் மிரட்டும் கணவர் மீது பலமுறை புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த வனத்துறை அதிகாரியின் மனைவி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

வேலூர், 

வேலூரை அடுத்த அமிர்தியில் வனச்சரக அதிகாரியாக பணிபுரிந்தவர் ராஜா. இவர் லஞ்சம் வாங்கியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய மனைவி மெர்லின் மாலதி. இவர் கடந்த 6-ந் தேதி தனது மகன்கள் சச்சின் (வயது 17), நெல்சன் (16) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

அதில் எனது கணவர் ராஜா என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். நான் பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எனது கணவர், புங்கனூரை சேர்ந்த ஒரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி கேட்டதற்கு எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். எனவே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறி அவரை அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் கொடுத்த புகார் மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அவரை ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் போகச்சொல்லி அலைக்கழித்துள்ளனர். இதுவரை அவருடைய கணவரை அழைத்து விசாரிக்கவில்லை. இந்த நிலையில் அவர் நேற்று மீண்டும் தனது மகன் சச்சினுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார்.

அவர் வருவதை அறிந்து கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வந்ததும் போலீசார் சூழ்ந்து கொண்டு விசாரித்தனர். பின்னர் அவரை தீவிரமாக சோதனை செய்து கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பொதுமக்கள் அமரும் இடத்தில் அவரை உட்காரவைத்து போலீசார் சுற்றி நின்றனர். அப்போது திடீர் என்று வெளியே சென்ற அவர் கலெக்டர் கார் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் நகர மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தி மனு கொடுக்க அழைத்து சென்றனர்.

அப்போது தனது கணவர் மீது பலமுறை புகார் கொடுத்தும் போலீசார் அவரை அழைத்து விசாரிக்கக்கூடவில்லை. இந்த நிலையில் எனது மூத்த மகன் சச்சினை நேற்று கடத்திச்சென்று அடித்து உதைத்துள்ளார். அவரிடமிருந்த எனது மகன் தப்பி வந்துவிட்டார். இதுகுறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார்.

மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story