திடக்கழிவு மேலாண்மை திட்டம் இருந்தும் பாலாற்றில் குப்பைகளை கொட்டும் மாநகராட்சி லாரிகள்
வேலூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் இருந்தும், மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் பாலாற்றில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வேலூர்,
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. வேலூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகிறார்கள். இதனால் வேலூர் நகரம் குப்பை தொட்டி இல்லாத நகரமாக மாற்றப்பட்டுள்ளது. நகரின் எந்தப்பகுதியிலும் குப்பைத்தொட்டி கிடையாது.
மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் மட்டுமே குப்பைகளை வழங்க வேண்டும். அதுவும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும். இவ்வாறு பிரித்து பெறப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு மக்கும் குப்பைகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் வேலூர் மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகவும், அதை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தவும் வெளிமாநில அதிகாரிகள் வேலூருக்கு வந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்டு செல்கிறார்கள்.
வேலூர் நகரில் குப்பைத்தொட்டிகள் இல்லாததால் பெரும்பாலான மக்கள், ஏற்கனவே குப்பைத்தொட்டிகள் இருந்த இடத்திலும், அவர்கள் வழக்கமாக குப்பை கொட்டிய இடங்களிலும் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இந்த குப்பைகளை மாநகராட்சி கண்டுகொள்வதில்லை. இதனால் ரோட்டோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் அனைத்தும் தீவைத்து எரிக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு கொண்டு செல்லப்படாமல் பாலாற்றில் கொட்டப்படுவதாக புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து பாலாற்றில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள பாலாற்றில் தினமும் மாநகராட்சி லாரி மூலம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நீர் ஆதாரமும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Related Tags :
Next Story