வாணியம்பாடி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பெண்


வாணியம்பாடி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பெண்
x
தினத்தந்தி 20 May 2019 9:45 PM GMT (Updated: 20 May 2019 4:42 PM GMT)

வாணியம்பாடி அருகே விவசாய கிணற்றில் பெண் பிணமாக மிதந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போலீசாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி, 

வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்தின். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை சங்கீதா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சங்கீதாவை தேடி பார்த்த போது அங்குள்ள விவசாய கிணற்றில் பிணமாக மிதந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சங்கீதாவின் உடலை மீட்டனர். அப்போது அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்தது.

அதைத் தொடர்ந்து சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் சங்கீதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அங்கிருந்த போலீசாரை முற்றுகையிட்டு, அவரது கணவரை கைது செய்ய வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story