பேரம்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் தரைப்பாலம் ஒரு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்


பேரம்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் தரைப்பாலம் ஒரு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்
x
தினத்தந்தி 21 May 2019 4:15 AM IST (Updated: 20 May 2019 10:48 PM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் ஒரு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு ஏற்பட்ட கனமழை காரணமாக பேரம்பாக்கத்தில் இருந்து இருளஞ்சேரி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் ஒரு பகுதி ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் பேரம்பாக்கத்தில் இருந்து இருளஞ்சேரி, கூவம், கொண்டஞ்சேரி, நரசிங்கபுரம், சிவபுரம், மாரிமங்கலம் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் இந்த தரைப்பாலத்தை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதம் அடைந்து இருந்தது. இதனால் பேரம்பாக்கம் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும் வியாபாரம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக இந்த தரைப்பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரம்பாக்கத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது பேரம்பாக்கம், கூவம், இருளஞ்சேரி, கொண்டஞ்சேரி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரம்பாக்கத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் 4 ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பேரம்பாக்கத்திற்கு வர சுமார் 2 கி.மீ. சுற்றி வரும் நிலை உள்ளது.

எனவே தரைப்பாலத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

அப்போது அவர் ரூ.30 லட்சம் மதிப்பில் தரைப்பாலத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டார். இப்பணி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த தரைப்பாலம் சீரமைக்கும் பணி விரைந்து முடிக்கப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பொதுமக்கள் சென்று வர ஏதுவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Next Story