பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா? ஜாமீனில் வந்த நபரின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை சேலத்தில் பரபரப்பு
சேலம் அம்மா பேட்டையில் ஜாமீனில் வந்த நபரின் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சேலம்,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த ஆண்டு அங்குள்ள சிலர் ரகசிய கூட்டம் நடத்தி ஒரு ‘வாட்ஸ்-அப்’ குழு ஏற்படுத்தியதாகவும், அதில், “வீரமரணம் எங்கள் இலக்கு” என்று தீவிரவாதம் பற்றிய சில தகவல்களை பரிமாற்றம் செய்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். அதன்பிறகு இந்த வழக்கு தீவிரவாதத்தை கண்காணிக்கும் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து ‘வாட்ஸ்-அப்’ கும்பல் குறித்த விவரங்களின் அடிப்படையில் அவர்கள் கூட்டம் நடத்திய விவரங்கள், சென்று வந்த இடங்கள், பின்னணி, சந்தித்த நபர்கள், சமூக வலைதளங்களில் வெளிவந்த தகவல்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தநிலையில், கீழக்கரை பகுதியில் அந்த ‘வாட்ஸ்-அப்’ குழுவில் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ஒருவர் இடம் பெற்றிருந்தார். இதனால் அவரது வீட்டில் சோதனை நடத்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை 5.30 மணிக்கு தேசிய புலனாய்வு அதிகாரிகள் சேலம் அம்மாபேட்டை சேர்மன் ராமலிங்கம் வீதியில் உள்ள அந்த நபரின் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்ட னர்.
அப்போது, அங்கு அந்த நபரின் தந்தையும், தாயும் மட்டும் இருந்தனர். அவர் களிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், வீட்டில் சோதனை நடத்தியபோது, பழைய செல்போன் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கீழக்கரை போலீசாரால் அந்த நபர் கைது செய்யப்பட்டு, அதன் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது அவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சேலத்தில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய தகவல் சென்னையில் உள்ள அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாத அமைப்பு களுடன் அவர் ஏதேனும் தொடர்பில் உள்ளாரா, அது தொடர்பான தகவல் பரிமாற் றம் ஏதும் நடந்துள்ளதா? என்ற கண்ணோட்டத்தில் இந்த சோதனை மேற் கொள்ளப்பட்டதாக கூறப் படுகிறது. சேலத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஜாமீனில் வந்த ஒருவரின் வீட்டில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story