புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு, சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய வாலிபர் கைது


புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு, சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 May 2019 4:15 AM IST (Updated: 20 May 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி,

பண்ருட்டி எல்.என்.புரம் பாரதி நகரில் ஒரு சரக்கு வாகனம் வெகுநேரமாக நிற்பதாகவும், அதில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் இருப்பதாகவும் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் சரக்கு வாகனத்தில் இருந்த 2 பேர் இறங்கி, தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கபிலன்(வயது 32) என்பதும், தப்பி ஓடியவர் மடுகரையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் குமார்(23) என்பதும் தெரியவந்தது.

பின்னர் அந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய 500 மதுபாட்டில்கள் மற்றும் 60 லிட்டர் சாராயம் இருந்தது. இது தொடர்பாக கபிலனிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கபிலனை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள், சாராயம், இவற்றை கடத்த பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய குமாரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story