வானூர் அருகே, காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி சாவு


வானூர் அருகே, காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி சாவு
x
தினத்தந்தி 20 May 2019 9:45 PM GMT (Updated: 20 May 2019 6:28 PM GMT)

வானூர் அருகே காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தான்.

விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டை சேர்ந்தவர் கமலநாதன். இவருடைய மகன் சுனிஷ் (வயது 4). இவன் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்போது எல்.கே.ஜி. படித்து முடித்துள்ளான்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கமலநாதன் தனது குடும்பத்தினருடன் செங்கமேட்டில் உள்ள கோவிலுக்கு காரில் சாமி கும்பிட சென்றார். கமலநாதனின் குடும்பத்தினர் காரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர்.

அந்த சமயத்தில் சிறுவன் சுனிஷ், காருக்குள் ஏறி விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென அவன், காரின் கதவை பூட்டிக்கொண்டான். இதனை கவனிக்காத அவனது பெற்றோர் பல இடங்களில் சிறுவனை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.பின்னர் வெகு நேரம் கழித்து காரின் அருகில் சென்று பார்த்தபோது காருக்குள் சிறுவன் சுனிஷ் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே காரின் கதவை திறந்து சுனிஷை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். காருக்குள் சிக்கிக்கொண்ட சுனிஷ் மூச்சு திணறி இறந்திருப்பது தெரியவந்தது. சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் உருக வைப்பதாக இருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story