விழுப்புரம் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


விழுப்புரம் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 May 2019 4:00 AM IST (Updated: 20 May 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள பானாம்பட்டு காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீரை நிரப்பும் மின் மோட்டார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென பழுதானது. அந்த மின் மோட்டாரை உடனடியாக சரிசெய்யாததால் கடந்த ஒரு வார காலமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்ற முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும் பழுதான மின் மோட்டாரை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 9.45 மணியளவில் பானாம்பட்டு மெயின்ரோட்டுக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதன் காரணமாக விழுப்புரம்- பில்லூர் சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பழுதான மின் மோட்டாரை உடனடியாக சரிசெய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் காலை 10.45 மணியளவில் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக அந்த வழியாக பில்லூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சை அவர்கள் சிறைபிடித்தனர். குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எடுத்தால், தான் அந்த பஸ்சை அங்கிருந்து விடுவிப்பதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர். போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டதை அடுத்து அந்த பஸ்சையும் அங்கிருந்து அவர்கள் விடுவித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story