குழந்தைகள் விற்பனை வழக்கில் சரண் அடைந்த நர்சின் தம்பியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்
குழந்தைகள் விற்பனை வழக்கில் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்த நர்சு அமுதவள்ளியின் தம்பியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக்கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மனுதாக்கல் செய்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் (நர்சு) அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், பெங்களூருவை சேர்ந்த அழகுகலை நிபுணர் ரேகா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் மேலும் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது? என சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் அமுதவள்ளியின் தம்பி நந்தகுமாரை (வயது 39) சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் திருச்சி கோர்ட்டில் கடந்த 16-ந் தேதி சரண் அடைந்தார்.
பின்னர் நந்தகுமார் அங்குள்ள சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இதை அறிந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், நந்தகுமாரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி கருணாநிதி முன்னிலையில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நந்தகுமாரை காவலில் எடுத்து விசாரித்தால் இவ்வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story