தர்மபுரி நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வாக்கு எண்ணும் பணியில் 500 அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள் கலெக்டர் மலர்விழி தகவல்


தர்மபுரி நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வாக்கு எண்ணும் பணியில் 500 அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள் கலெக்டர் மலர்விழி தகவல்
x
தினத்தந்தி 21 May 2019 4:00 AM IST (Updated: 21 May 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நாடாளுமன்றம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணும் பணியில் 500 அலுவலர்கள் ஈடுபடுவதாக கலெக்டர் மலர்விழி தெரிவித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மலர்விழி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்ற அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தபால் ஓட்டுகளை எண்ண 3 மேஜைகள் அமைக்கப்படும். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் ஓட்டு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம் போடப்படும்.

பாலக்கோடு தொகுதியில் 19 சுற்றுகளும், பென்னாகரம் தொகுதியில் 21 சுற்றுகளும், தர்மபுரி தொகுதியில் 22 சுற்றுகளும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 23 சுற்றுகளும், அரூர்(தனி) தொகுதியில் 22 சுற்றுகளும், மேட்டூர் தொகுதியில் 23 சுற்றுகளும் என ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 23 சுற்றுகளாகவும், அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை 22 சுற்றுகளாகவும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை சுமார் 30 நிமிடங்கள் நடைபெறும்.

ஒரு மேஜைக்கு தலா 3 பணியாளர்கள் வீதம் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடுவார்கள். சட்டமன்ற தொகுதிக்கு தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு தலா 2 மேஜைகள் வீதம் அமைத்து ஓட்டுகள் எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை பணியில் 500 அலுவலர்களும், 900 போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும். ஓட்டு எண்ணிக்கையை நுண்பார்வையாளர்கள் கண்காணித்து தேர்தல் பார்வையாளருக்கு அறிக்கை அளிப்பார்கள்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவன்அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணி உள்ளிட்ட அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story