கோவில் திருவிழாவின் போது தேனீக்கள் கொட்டியதில் குழந்தைகள் உள்பட 50 பேர் காயம்
தேன்கனிக்கோட்டை அருகே கோவில் திருவிழாவின் போது தேனீக்கள் கொட்டியதில் குழந்தைகள் உள்பட 50 பேர்காயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது அருளாளம் கிராமம். இந்த கிராமத்தில் மல்லேஷ்வரா சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேள, தாளங்கள் முழங்கவும், பட்டாசு வெடித்தும் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.
கோவில் அருகே ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள ஒரு மரத்தில் இருந்த தேன் கூட்டில் இருந்து திடீரென தேனீக்கள் கலைந்து பறந்து வந்தன. பின்னர் அவைகள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்த பக்தர்களை பறந்து, பறந்து கொட்ட ஆரம்பித்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அவர்களை தேனீக்கள் விடாமல் துரத்தி கொட்டியது. இதில், 10 குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர். மேலும் தேனீக்கள் கொட்டியதில் சிலர் மயங்கி விழுந்தனர்.
இதைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கோவில் திருவிழாவின் போது தேனீக்கள் கொட்டி 50 பேர்காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story