ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தபால் ஓட்டு எண்ணும் பணியாளர்களுக்கு பயிற்சி
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தபால் ஓட்டு எண்ணும் பணியாளர்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டசபை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஈரோடு அருகே உள்ள சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தபால் ஓட்டும், 8.30 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரமும், அதைத்தொடர்ந்து, விவிபேட் கருவிகளில் உள்ள ஓட்டுகளும் எண்ணப்படும்.
இதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டு அதில் தலா 3 பணியாளர்கள் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளனர். இந்த பணியில் 252 பேரும், நுண் பார்வையாளர்கள் 84 பேரும் என 336 பேர் ஈடுபட உள்ளனர்.
இவர்களுக்கு கடந்த வாரம் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் அன்று கூடுதலாக 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் தபால் ஓட்டும் எண்ணும் பணியாளர்களுக்கு, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமையில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. தபால் ஓட்டை எவ்வாறு பிரிப்பது, எண்ணுவது? செல்லாத ஓட்டுகளை எவ்வாறு கண்டறிவது? உள்ளிட்ட பயிற்சிகள் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story