வரிசையாக வாகனங்கள் வந்ததால் ரோட்டை கடக்க முடியாமல் தவித்த யானைகள்


வரிசையாக வாகனங்கள் வந்ததால் ரோட்டை கடக்க முடியாமல் தவித்த யானைகள்
x
தினத்தந்தி 21 May 2019 3:45 AM IST (Updated: 21 May 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

வரிசையாக வாகனங்கள் வந்ததால் ரோட்டை கடக்க முடியாமல் யானைகள் தவித்தன.

தாளவாடி, 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், பவானிசாகர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், விளாமுண்டி என 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான யானைகள், சிறுத்தைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளன.

இதில் யானைகள், மான்கள் தங்களுடைய வாழ்விடங்களில் தண்ணீர், தீவனம் கிடைக்கவில்லை என்றால் ஒரு வனப்பகுதியை விட்டு மற்றொரு வனப்பகுதிக்கு இடம்பெயர்வது வழக்கம்.

இந்த நிலையில் ஆசனூர் வனச்சரகத்தில், 5 யானைகள் நேற்று முன்தினம் மாலை தண்ணீரை தேடி வனப்பகுதிக்குள் உலாவிக்கொண்டு இருந்தன. ஆசனூர் வனப்பகுதி வழியாகத்தான் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அப்போது சீவக்காபள்ளம் என்ற இடத்துக்கு வந்த யானைகள் நெடுஞ்சாலையை கடப்பதற்காக சாலை ஓரத்துக்கு வந்தன.

ஆனால் அந்த வழியாக வாகனங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்தன. இதனால் ரோட்டை கடக்க முடியாமல் சுமார் 30 நிமிடம் ரோட்டு ஓரத்திலேயே யானைகள் தவித்தன. அதன்பின்னரே ரோட்டை கடந்து மறுபக்கம் சென்றன.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘யானைகள் ரோட்டை கடப்பதற்காக சாலையோரம் நின்றால் வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே தங்களுடைய வாகனங்களை நிறுத்திவிடவேண்டும். காற்று ஒலிப்பான்களை ஒலிக்க கூடாது. அருகே வந்து செல்போன்களில் செல்பி எடுக்க கூடாது. யானைகள் ரோட்டை கடப்பதற்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது.

யானைகள் ரோட்டை கடந்து மறுபக்கம் சென்றபின்னரே வாகனங்களை எடுக்க வேண்டும்‘ என்றார்கள்.

Next Story