பேட்டையில் தீயில் கருகி 50 ஆடுகள் சாவு


பேட்டையில் தீயில் கருகி 50 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 21 May 2019 4:15 AM IST (Updated: 21 May 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே தீயில் கருகி 50 ஆடுகள் இறந்தன.

பேட்டை,

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் மாடசாமி, இசக்கிமுத்து. நாங்குநேரியைச் சேர்ந்தவர் பரமசிவம். மூலைக்கரைப்பட்டி அருகே ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பாண்டி. ஆடு மேய்க்கும் தொழிலாளர்களான இவர்கள் 4 பேரும் நூற்றுக்கணக்கான ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களாக நெல்லையை அடுத்த பேட்டை மலையாள மேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஓலைக்கீற்றால் ஆட்டு கொட்டகை அமைத்து, அங்குள்ள காட்டு பகுதியில் தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

நேற்று காலையில் வழக்கம்போல் மாடசாமி, இசக்கிமுத்து, பரமசிவம், பாண்டி ஆகிய 4 பேரும் தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர்கள், 50 ஆட்டுக் குட்டிகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லாமல், கொட்டகையிலே விட்டு சென்றனர்.

அப்போது மதியம் 2 மணி அளவில் அங்குள்ள வயலில் காய்ந்த புற்களில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று ஆட்டு கொட்டகைக்கும் பரவியது.

இதனால் அங்கிருந்த 50 ஆட்டுக்குட்டிகளும் தீயில் கருகி இறந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, பேட்டை தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தீயில் கருகி இறந்த ஆட்டுக்குட்டிகளை வருவாய் ஆய்வாளர் அருணாசலம், கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளா ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story