திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறைகள், 96 ‘வெப்’ கேமராக்கள் மூலம் கண்காணிப்பு


திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறைகள், 96 ‘வெப்’ கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 20 May 2019 11:00 PM GMT (Updated: 20 May 2019 9:00 PM GMT)

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறைகள் 96 ‘வெப்’ கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையமான பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு நேற்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான எஸ்.சிவராசு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிடுவதற்கும், கண்காணிப்பதற்கும் தனி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும், வாக்களிப்பதை உறுதிசெய்யும் கருவிகளில்(வி.வி.பேட்) உள்ள வாக்குச் சீட்டுகள் எண்ணுவதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 பெட்டிகளையும், மேலும் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் சிவராசு கூறியதாவது:-

திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஸ்ரீரங்கம், திருச்சி(கிழக்கு), திருச்சி (மேற்கு), திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியது. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த மாதம் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணும் மையமான பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பான அறைகளில் வைத்து, அனைத்து கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் எண்ணப்படும் வாக்குகளை சுற்றுவாரியாக பிளக்ஸ் பேனரில் எழுதி தெரிவிக்கப்படும்.

மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்கள் 288 பேர், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. மத்திய அரசில் பணிபுரியும் நுண்பார்வையாளர் ஒருவரும், மாநில அரசில் பணிபுரியும் பணியாளர் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளராகவும், உதவியாளர் ஒருவரும் என ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் வீதம் மொத்தம் 252 பணியாளர்களும் மற்றும் 36 மாற்றுப் பணியாளர்களும் தயார் நிலையில் இருப்பார்கள்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒவ்வொரு மேஜைக்கும் ‘வெப்’ கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் ஒரு அறைக்கு 16 ‘வெப்’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, 6 சட்டமன்ற தொகுதிக்கும் மொத்தம் 96 ‘வெப்’ கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார், திருச்சி உதவி கலெக்டர் அன்பழகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(கட்டிடம்) அன்பரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி, தாசில்தார்கள் அண்ணாதுரை(திருவெறும்பூர்), ராஜவேல்(திருச்சி மேற்கு), சண்முகவேலன் (திருச்சி கிழக்கு), கனகமாணிக்கம்(ஸ்ரீரங்கம்), தேர்தல் தனி தாசில்தார் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Next Story