கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் திடீர் தாழ்வு; படகு போக்குவரத்து பாதிப்பு


கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் திடீர் தாழ்வு; படகு போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 May 2019 11:15 PM GMT (Updated: 20 May 2019 9:17 PM GMT)

கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டத்தில் திடீர் தாழ்வு ஏற்பட்டதால், படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி,

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. அதன்படி நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து, கடலில் நீராடி, பகவதி அம்மனை தரிசித்துவிட்டு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்ல படகுத்துறைக்கு சென்றனர்.

அங்கு காலை 6 மணி முதலே சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் திடீரென தாழ்ந்து காணப்பட்டது.

இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அப்போது படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டின.

பின்னர் கடல் நீர் மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, 9 மணி அளவில் படகு போக்குவரத்து தொடங்கியது. கடல்நீர் மட்டம் திடீர் தாழ்வு காரணமாக ஒரு மணி நேரம் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடல் நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்ட போது முக்கடல் சங்கமிக்கும் சங்கிலி துறை கடல் பகுதி கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என சுற்றுலா போலீசார் எச்சரித்தனர். மேலும் கடலில் குளிக்க சென்றவர்களையும் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து கடலுக்குள் யாரும் செல்லாமல் இருக்க சுற்றுலா போலீசார் கடற் கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story