நள்ளிரவில், ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண் - போலீசார் காப்பாற்றினர்
விருதுநகர் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை போலீசார் காப்பாற்றினர்.
விருதுநகர்,
நெல்லை கக்கன்நகரைச் சேர்ந்தவர் தவசிக்கனி. இவரது மனைவி ஜோதி மேரிபாய் (வயது 60). சமூக சேவகியான இவர் சென்னையில் இருந்து நெல்லை செல்வதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரைக்கு டிக்கெட் எடுத்தார். ஆனால் தவறுதலாக பல்லவன் எக்ஸ்பிரசில் ஏறிவிட்ட ஜோதிமேரிபாய் காரைக்குடியில் இறங்கினார்.
அங்கிருந்து விருதுநகர் வந்து நெல்லை சென்று விடலாம் என்று திட்டமிட்ட ஜோதிமேரிபாய் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் விருதுநகருக்கு பயணம் செய்தார். இந்த ரெயில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் விருதுநகர் ரெயில் நிலையம் வந்தது.
விருதுநகர் வந்தது தெரியாமல் தூங்கி விட்ட ஜோதிமேரிபாய் ரெயில் புறப்பட்டவுடன் கண் விழித்தார். உடனே அருகில் இருந்தவர்களிடம் விசாரித்து விருதுநகர் வந்தது குறித்து தெரிந்து கொண்டு ஓடும் ரெயிலில் இருந்து அவசரமாக இறங்க முயற்சி செய்தார். அப்போது தடுமாறிய அவர் படிக்கட்டில் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பிரபு, சத்தியராஜ் ஆகிய 2 போலீசார் ஓடி சென்று படிக்கட்டில் தொங்கியபடி சென்ற ஜோதிமேரிபாயை 100 மீட்டர் தூரம் சென்று தாங்கிப் பிடித்து காப்பாற்றினர். பின்னர் அவரை ரெயில்நிலைய ஓய்வறைக்கு கொண்டு வந்தனர்.
ஜோதிமேரிபாய் காயம் ஏதும் இன்றி தப்பினார். பின்னர் அவரை நெல்லை ரெயிலில் அனுப்பி வைத்தனர். ஜோதி மேரிபாயை விபத்து அபாயத்தில் இருந்து காப்பாற்றிய ரெயில்வே போலீசாரை ரெயில்நிலைய அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டினர்.
Related Tags :
Next Story