ராஜபாளையத்தில், தோப்புக்குள் புகுந்து மாமரங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம் - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ராஜபாளையத்தில் விவசாய தோப்புக்குள் புகுந்த யானைக் கூட்டம் அங்கிருந்த 300-க்கும் மேற்பட்ட மாமரங்களை ஒடித்து சேதப்படுத்தியது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தம்பாத்து ஊருணியை அடுத்து வண்டிப்பண்ணை பீட் அமைந்துள்ளது. இங்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன், சேவியர், சந்திரன், வெங்கலம் மற்றும் துரைசாமி உள்ளிட்ட சிறு விவசாயிகள் மா விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது காய்கள் விளைச்சல் அடைந்து வியாபாரத்திற்கு அனுப்பும் நிலையில் உள்ளது. சில மரங்களில் உள்ள மாங்காய்களை விவசாயிகள் விற்பனை செய்து விட்ட நிலையில், பல மரங்களில் காய் பறிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வரும் யானைக் கூட்டம் விவசாய தோப்புகளில் புகுந்து விடுகின்றன. நேற்று இரவு மாந்தோப்பில் புகுந்த 7 யானைகள் அங்கு இருந்த 300-க்கும் மேற்பட்ட மா மரங்களை ஒடித்து சேதப்படுத்தி உள்ளது.
ஒரு மரத்தை வேரோடு சாய்த்து நாசப்படுத்தியதுடன், காய்கள் அதிகமாக விளைந்துள்ள கிளைகளை ஒடித்து காய்களை தின்றுள்ளன. காலையில் தோப்புக்குச் சென்ற விவசாயிகள் மாமரங்கள் நாசமாகிக் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பல்வேறு சிரமங்களுக்கு இடையே பல வருடங்களாக வளர்த்த மரங்களை யானைகள் ஒடித்து சேதப்படுத்தி விட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
காய்கள் காய்த்த நிலையில் உள்ள மரங்களை யானைகள் சேதப்படுத்தியதால் தற்போது வரை ரூ.2 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், யானைகள் கூட்டமாக வருவதால் பட்டாசு வெடித்தும் அவற்றை விரட்ட முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாகவும் மா விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
எனவே சேதமான மரங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவும், போதுமான ஆழத்திற்கு அகழி வெட்டி யானைகள் விவசாய தோப்புகளுக்குள் வராதவாறு பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story