திருவாடானை தாலுகாவில், தண்ணீரைத்தேடி குடியிருப்பு பகுதிக்கு வரும் மான்கள்
திருவாடானை தாலுகாவில் தண்ணீரைத்தேடி குடியிருப்பு பகுதிக்கு மான்கள் வருகின்றன.
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் அதிகஅளவில் கண்மாய்கள் உள்ளதால் அடர்ந்த காடுகளில் ஏராளமான அரிய வகை மான்கள் வசித்து வருகின்றன. மான்கள் வசிப்பதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் உகந்த சூழல் இக்காடுகளில் இருப்பதால் ஏராளமான மான்கள் கண்மாய் பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. மழை பெய்யாததால் கண்மாய்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. இதனால் காடுகளுக்குள் தண்ணீர் கிடைக்காமல் மான்கள் பல நேரங்களில் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. அப்படி வரும் மான்களை கண்டவுடன் கிராமங்களுக்குள் சுற்றித்திரியும் நாய்கள் அவற்றை விரட்டி கடித்து விடுகின்றன.
இதனால் காயமடையும் மான்களுக்கு சிகிச்சை செய்ய காலதாமதமாகி விடுவதால் பல நேரங்களில் மான்கள் இறந்து விடும் நிலை உள்ளது. இதேபோல மான்கள் அதிகஅளவில் சுற்றி திரிவதை அறிந்து சிலர் வேட்டையாடுவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில் இருந்து மான்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன விலங்குகள் ஆர்வலர்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அஞ்சுகோட்டை ஆணிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:- அஞ்சுகோட்டை கண்மாய் பரப்பளவில் திருவாடானை தாலுகாவில் முதல் இடத்தையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3-வது இடத்தையும் கொண்ட கண்மாயாக உள்ளது. இங்கு மான்கள் அதிக அளவில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளது. இதனால் அஞ்சுகோட்டை கண்மாயில் புள்ளி மான்கள் மற்றும் பெரிய தோற்றமுள்ள கொம்பு மான்களும் அதிகஅளவில் வசிக்கின்றன. தற்போது தண்ணீர் இல்லாததால் மான்கள் காட்டு பகுதியை விட்டு குடியிருப்புகளுக்குள் வரத்தொடங்கியுள்ளன. இதனால் அவற்றின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த கண்மாயை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து ஆங்காங்கே குடிநீர் தொட்டி அமைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்தால் மான்களை பாதுகாக்க ஏதுவாக இருக்கும்.
எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் அஞ்சுகோட்டை கண்மாயில் மிகப்பெரிய மான்கள் சரணாலயம் இயற்கையாகவே உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story