கருத்துக்கணிப்புகள் உண்மை, பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமையும் - சத்தீஷ்கர் முன்னாள் முதல்-மந்திரி பேட்டி
கருத்துக்கணிப்புகள் உண்மை, பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமையும் என்று சத்தீஷ்கர் மாநில முன்னாள் முதல்-மந்திரி கூறினார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று சத்தீஷ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல் -மந்திரி ராமன்சிங் வருகை தந்தார். அவர் கோவிலில் சாமி-அம்பாள்,ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து, உலகளவில் பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தை பார்த்து ரசித்தார். தொடர்ந்து அவர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டிற்கு சென்று கலாமின் மூத்த சகோதரர் முகமதுமுத்துமீரான் லெப்பை மரைக்காயரை சந்தித்து பேசினார்.
அப்போது சத்தீஷ்கர் மாநில முன்னாள் முதல்-மந்திரிக்கு கலாமின் சகோதரர் கலாம் எழுதிய புத்தகம் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார். உடன் கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், பேரன் ஷேக்சலீம், பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் முரளிதரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து ராமன்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு எளிமையாக வாழ்ந்து படித்து பல சாதனைகள் படைத்து ஜனாதிபதி வரையிலும் பதவி வகித்து சாதனை படைத்தவர் அப்துல்கலாம். கலாம் மீது சத்தீஷ்கர் மாநில மக்கள் தனி மரியாதை வைத்துள்ளனர். கருத்துக்கணிப்பில் உண்மையில்லை என எதிர்க் கட்சிகள் கூறுவதை ஏற்க முடியாது. 23-ந் தேதி அன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் போடுவது எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக தான் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளனர். தேர்தல் கருத்துக்கணிப்புகள் உண்மை, மீண்டும் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி ஆமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story