அதானியில் முழு அடைப்பு போராட்டம் : பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு


அதானியில் முழு அடைப்பு போராட்டம் : பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 20 May 2019 11:59 PM GMT (Updated: 20 May 2019 11:59 PM GMT)

மராட்டிய அணையில் இருந்து கிருஷ்ணா நதிக்கு தண்ணீர் திறக்க கோரி அதானியில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பஸ், ஆட்டோக்கள் ஓடாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

பெங்களூரு, 

மராட்டிய-கர்நாடக எல்லையாக பெலகாவி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் வழியாக கிருஷ்ணா நதி ஓடுகிறது. கிருஷ்ணா நதி தண்ணீரை நம்பி தான் பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா மக்கள் உள்ளனர். தற்போது கோடைக்காலம் என்பதால் கிருஷ்ணா நதியில் தண்ணீர் இல்லை. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதை சரிசெய்யக்கோரி அந்தபகுதி மக்கள் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக மராட்டிய அணையில் இருந்து கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று மாநில அரசு, மராட்டிய அரசுக்கு கோரிக்கை வைத்தது. இருப்பினும் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதை கண்டித்து நேற்று அதானியில் முழு அழைப்பு போராட்டத்துக்கு விவசாய சங்கத்தினர், கன்னட அமைப்பு உள்பட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அழைப்பு விடுத்து இருந்தனர். அதன்படி, நேற்று அதானியில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தின்போது பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அரை நிர்வாணமாக ஊர்வலம் சென்றனர். மேலும் சாலையில் அமர்ந்து மராட்டிய அரசுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். முக்கிய சாலைகள், சர்க்கிள்களில் டயர்களுக்கு தீவைத்து எரித்து அவர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். மேலும் பெண்களும் சாலையில் அமர்ந்து சாப்பிட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதுபோன்ற நடவடிக்கையால் அதானியில் நேற்று ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக போராட்டக்காரர்கள் பெலகாவி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், அவர்கள் கலெக்டரை சந்தித்து மராட்டியத்தில் இருந்து கிருஷ்ணா நதிக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தக்கோரி கோரிக்கை மனு கொடுத்து சென்றனர்.

Next Story