காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் : தினேஷ் குண்டுராவ் சொல்கிறார்


காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் : தினேஷ் குண்டுராவ் சொல்கிறார்
x
தினத்தந்தி 21 May 2019 5:44 AM IST (Updated: 21 May 2019 5:44 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

நாடாளுமன்ற தேர்தலுக்கான கருத்து கணிப்புகள் பா.ஜனதாவுக்கு சாதமாக வந்திருப்பது நம்பும்படியாக இல்லை. கடந்த 5 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. ஏழைகள், விவசாயிகளுக்காக எந்த ஒரு திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வரவில்லை. இதனால் பா.ஜனதா ஆட்சியின் மீது நாட்டு மக்கள் அதிருப்தியில் தான் இருந்தனர்.

அப்படி இருக்கும் பட்சத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு சாதகமாக முடிவுகள் வந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. கருத்து கணிப்பு முடிவுகள் பெரும் பாலும் தவறாகவே இருந்துள்ளது. வருகிற 23-ந் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளே உண்மையாக இருக்கும்.

கருத்து கணிப்புகளின்படி கர்நாடகத்தில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெறாது. பா.ஜனதாவை விட காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றி இருந்தால், இன்னும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். தற்போது வெளியாகி உள்ள கருத்து கணிப்புகள் பொய்யாகி மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். மண்டியா தொகுதி பற்றி தற்போது பேசவில்லை.

கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூட்டணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி ஊடகங்களில் பகிரங்கமாக பேசக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Next Story