நாளை ஓட்டு எண்ணிக்கை கடலூரில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் - கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் ஐ.ஜி.நாகராஜன் பார்வையிட்டனர்


நாளை ஓட்டு எண்ணிக்கை கடலூரில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் - கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் ஐ.ஜி.நாகராஜன் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 21 May 2019 10:45 PM GMT (Updated: 21 May 2019 6:52 PM GMT)

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தயார் நிலையில் ஊழியர்கள் உள்ளனர். முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் ஐ.ஜி. நாகராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.

கடலூர்,

தி.மு.க., பா.ம.க. உள்பட 21 வேட்பாளர்கள் போட்டியிட்ட கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. இத்தொகுதியில் உள்ள 13 லட்சத்து 63 ஆயிரத்து 650 வாக்காளர்களில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 3 வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். இது 76.12 சதவீதமாகும்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வி.வி.பேட் கருவிகளும் வாக்கு எண்ணும் மையமான கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கான பயிற்சி பெரியார் அரசு கல்லூரியில் நடந்தது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அன்புசெல்வன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் நாளை(வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஓட்டு எண்ணும் பணியில் 500 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். ஓட்டு எண்ணும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் 23-ந்தேதி காலை 5 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து விடுவார்கள். காலை 7.30 மணிக்கு முன்னதாக வேட்பாளர்களின் முகவர்கள் வந்து விட வேண்டும்.

மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் காலை 6.30 மணிக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்படும். காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

ஓட்டு எண்ணிக்கைக்காக நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் போடப்பட்டு உள்ளன. இதுதவிர ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணும் அறையிலும் வி.வி.பேட் கருவிகளில் பதிவாகி உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்காக கூடுதலாக ஒரு மேஜை போடப்பட்டு இருக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மின்னணுவாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 5 வி.வி.பேட் கருவிகளில் உள்ள ஓட்டுகள் எண்ணப்படும்.

ஒவ்வொரு சுற்றிலும் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் ‘சுவிதா’ செல்போன் செயலியில் வெளியிடப்படும். அந்த செயலியை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கும் செய்து கொண்டால் ஓட்டு எண்ணிக்கை விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். இதுதவிர ஓட்டு எண்ணும் மையத்துக்கு வெளியே திரண்டு இருக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படும்.

வெளியில் இருந்து எந்தபொருட்களையும் உள்ளே கொண்டு வர அனுமதி இல்லை. வேட்பாளர்களின் முகவர்களுக்கு உணவு, பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திலேயே வழங்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர் ஆகியோரை தவிர வேறு யாரும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்போன் வைத்திருக்க அனுமதி கிடையாது.

ஓட்டு எண்ணும் மையத்துக்கு வருபவர்கள் கட்சிக்கொடி கட்டிய வாகனங்களில் வரக்கூடாது, ஓட்டு எண்ணும் மையத்துக்கு வெளியே பட்டாசுகளும் வெடிக்கக்கூடாது. வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.நாகராஜன் நேற்று காலை கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு பாதுகாப்பை உறுதி செய்துகொண்டார். பின்னர் அரசு அதிகாரிகள், முகவர்கள், பொதுமக்கள் ஆகியோர் வாகனங்களை நிறுத்துவதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்து பெரியார் கல்லூரியின் எதிரே உள்ள மைதானத்தில் வாகனம் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தையும் ஐ.ஜி.நாகராஜன் பார்வையிட்டார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த அவர், வாக்கு எண்ணிக்கை நாள் அன்று மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார். இதில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்தி, ஸ்ரீதரன், சரவணன், லோகநாதன், நாகராஜன், இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story