மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது + "||" + Improper romantic affair,Driver, killing the stone - 3 arrested

கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது

கள்ளக்காதல் விவகாரம், டிரைவர், கல்லால் தாக்கி கொலை - 3 பேர் கைது
கச்சிராயப்பாளையம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயப்பாளையம்,

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள லக்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அஜிஸ் மகன் ரஷித் (வயது 32), போர்வெல் லாரி டிரைவர். இவரது மனைவி ஆஷா ராமி(25). இவர்களுக்கு அசித்(2) என்ற மகன் உள்ளான். ரஷித் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான ரகுமான்(25) என்பவர் வீட்டுக்கு சென்று வந்த போது, அவரது உறவினர் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த ரகுமான், தனது உறவினர் பெண்ணுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு ரஷித்தை கண்டித்தார். ஆனால் ரஷித் அந்த பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரஷித் வெளியூருக்கு வேலைக்கு சென்றார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் ரஷித்தை கொலை செய்ய ரகுமான் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த இப்பு(21), சையத் அகமது மகன் சர்புதீன்(21) ஆகியோருடன் திட்டமிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த ரஷித்தை மதுகுடிக்க வருமாறு ரகுமான் அழைத்தார். உடனே அவர் தனது மனைவியிடம் கூறிவிட்டு ரகுமான், இப்பு, சர்புதீன் ஆகியோருடன் மதுகுடிப்பதற்காக கல்வராயன்மலையில் உள்ள மூலக்காட்டுக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்றார்.

அங்கு ரஷித் உள்ளிட்ட 4 பேரும் மது அருந்தினர். ரஷித்துக்கு போதை தலைக்கேறியதும் ரகுமான், இப்பு, சர்புதீன் ஆகியோர் சேர்ந்து அவரை உருட்டுக்கட்டையாலும், கல்லாலும் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ரஷித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ரஷித் இறந்ததும் ரகுமான் உள்ளிட்ட 3 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதற்கிடையே ரஷித் இறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் கரியாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிணமாக கிடந்த ரஷித்தின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ரகுமான் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரஷித்தை கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரகுமான், இப்பு, சர்புதீன் ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.