மன்னார்குடியில் பெண் எரித்துக்கொலை யார் அவர்? போலீசார் விசாரணை


மன்னார்குடியில் பெண் எரித்துக்கொலை யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 May 2019 3:45 AM IST (Updated: 22 May 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நியூ பைபாஸ் ரோட்டில் ஹவுசிங் யூனிட் எதிரே கருவேல மரங்கள் நிறைந்த பகுதி உள்ளது. நேற்று காலை அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெண் ஒருவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

எரித்துக்கொலை

விசாரணையில், அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அந்த பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு திருவாரூரில் இருந்து மோப்பநாய் ராக்சி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் பெண்ணின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. பின்னர் அந்த இடத்திலேயே நின்று விட்டது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும். இந்த பெண் ஏன் கருவேல மரங்கள் நிறைந்த பகுதிக்கு வந்தார்?. மர்ம நபர்கள் அவரை இங்கு தூக்கி வந்து பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அவரை எரித்துக்கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story